Thursday, April 19, 2012

DEIVATHIN KURAL - AMBAL PARVATHI IS SRI RAMA

“”ராமாயணம் நம் எல்லாருக்கும் தெரிந்த கதைதான். ஆனால் அந்த தெரிந்த கதையையே உங்களுக்குத் தெரியாத மாதிரி சொல்கிறேன். வால்மீகி, கம்பர், துளசிதாசர் எழுதியவை தவிர, ஆனந்த ராமாயணம், அற்புத ராமாயணம், துர் வாச ராமாயணம் என்றெல்லாம் பல ராமாய ணங்கள் இருக்கின்றன. அதில் ஏதோ ஒன்றில் இந்த வித்தியாசமான விஷயம் இருக்கிறது.
அம்பாள்தான் ஸ்ரீராமனாக அவதரித்தாள் என்பது கதை. ஈஸ்வரனே சீதையாக உடன் வந்தார். ஸ்ரீராமன் நல்ல பச்சை நிறம்! “மரகத மணி வர்ணன்’ என்பார்கள். அம்பிகையை “மாதா மரகத சியாமா’ என்கிறார் காளிதாசர். முத்து சுவாமி தீட்சிதரும் “மரகத் சாயே’ என்று மீனாட்சியைப் பாடுகிறார். சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரத்தைத் தாண்டி மூலகாரணமாக இருக் கிறபோது பராசக்தி செக்கச் செவேல் என்று இருந்த போதிலும், மும்மூர்த்திகளில் ஒருவருக்குப் பத்தினியாக பார்வதியாகி இருக்கிறபோது பச்சை நிறமாகத்தான் இருக்கிறாள். இவள்தான் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியாக வந்தாள்.
ஸ்ரீராமன் சீதையை விட்டு காட்டுக்குப் போவது என்று தீர்மானம் பண்ணி விடுகிறார். அப்போது தேவிக்கு உணர்ச்சி பீறிட்டுக் கொண்டு வந்துவிடுகிறது! “காட்டிலே துஷ்டர் பயம், மிருக பயம் இருக்கிறது என்பதற்காக மனைவியை அழைத்துப் போக மறுக்கிறாரே… இவரும் ஓர் ஆண் பிள்ளையா’ என்று அவளுக்கு மகா கோபம் வர, அந்த வேகத்தில் ஓர் உண்மையைச் சொல்லி விடுகிறாள். “உம்மை மாப்பிள்ளையாக வரித்த என் பிதா ஜனகர், நீர் ஆண் வேடத்தில் வந்திருக்கிற ஒரு பெண் (ஸ்திரியம் புருஷ விக்ரஹம்) என்பதைத் தெரிந்து கொள்ளாமல் போனாரே’ என்று ராமரைப் பார்த்துச் சண்டை போடுகிறாள் சீதாதேவி. இது சாக்ஷாத் வால்மீகி ராமாயண வசனம்.
ஸ்ரீராமனுக்கு அவர் அம்பாள்தான் என்பதை இப்படி சூட்சுமமாக ஞாபகப்படுத்தி விட்டாள் சீதை. உடனே அவருக்கு அவதாரக் காரியம் நினைவுக்கு வந்தது. அதற்கு அனுகூலமாகவே விளையாட்டு நடப்பதற்காக சீதையை அழைத்துக் கொண்டு காட்டுக்குப் போனார்.
ராமரால் சம்ஹரிக்கப்பட வேண்டிய இராவணனோ பெரிய சிவ பக்தன். ஆதியில் அவனுக்கு சிவனையே கைலாசத்திலிருந்து இலங்கைக்குக் கொண்டு வந்து அசோகவனத் தில் வைத்துப் பூஜை செய்ய வேண்டும் என்று ஆசை. அதற்காகத்தான் கைலாசத்தைப் பெயர்த் துப் பார்த்தான். அப்போது அம்பிகை பயந்து ஈசுவரனைக் கட்டிக்கொள்ள, அவர் விரல் நுனியால் மலையை அழுத்தி விட்டார். தப்பினோம் பிழைத்தோம் என்று இராவணன் இலங்கைக்கு ஓடி வந்துவிட்டான். மகா சிவபக்தனாகையால் அவனுக்குத் தன்னுடைய ஈசுவரன்தான் சீதையாக வந்திருக்கிறார் என்று தெரிந்து விட்டதாம். முன்பு அம்பாளால்தான் தன் காரியம் கெட்டுப் போச்சு என்கிற கோபத் தினால், இப்போது அவள் தலையீடு இருக்கக் கூடாது என்றே ராமரை அப்புறப்படுத்திவிட்டு, சீதையைத் தூக்கி வந்து அசோகவனத்தில் வைத்தானாம். ஆனாலும் ராட்சச அறிவானதாலும் அம்மையப்பனான ஜோடியில், ஒன்றை விட்டு ஒன்றை மட்டும் பிடித்துக் கொண்டதாலும் இராவணனுடைய அன்பு விகாரப் பட்டுக் காமமாயிற்று. இருந்தாலும் சிவபக்தியினால் இவனுக்கு அவதார ரகசியம் அவ்வப்போது கொஞ்சம் தெரிந்தது.
ஆஞ்சனேயரைப் பார்த்தவுடனே இராவ ணன், “இவர் யார்? நந்தியெம் பெருமானா?’ என்று நினைக்கிறான். “கிமேஷ பகவான் நந்தி’ என்பது வால்மீகி ராமாயண வசனம். சீதாராமர் களின் பரமதாசனாக இருக்கப்பட்ட அனுமா ரைப் பார்த்ததும், கைலாயத்தில் சுவாமிக்கும் அம்பாளுக்கும் தாசனாக இருக்கிற நந்திதான் அவர் என்பது புரிந்ததுபோல இராவணன் பேசுகிறான்.
அம்பாளே நாராயணன் என்பதற்காக இந்தக் கதை எல்லாம் சொல்கிறேன். இரண்டும் ஒன்றாக இருக்கட்டும். ஆனால் நாராயணன் என்கிற புருஷ ரூபம், அம்பாளின் ஸ்திரி ரூபம் இரண்டும் நன்றாக இருக்கின்றனவே… இரண் டையும் வைத்துக் கொள்ளலாமே என்று தோன்றுகிறது. அப்போது அவர்களைச் சகோதரர்களாக வைத்துக் கொள்ளலாம். அம்பாளை நாராயணணின் சகோதரி என்று சொல்வதற்கும் புராணக் கதைகள் எல்லாம் பக்கபலமாக இருக்கின்றன.”

No comments: